தமிழ்த் தொண்டு

           சங்ககாலப் புலவர்களுள் ஒருவராக போற்றப்படும் ஒளவை எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் மொத்தம் பாடல்கள் 59 இயற்றியுள்ளார். அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள். தமிழ் மொழியின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றும் விதத்தில் காலங்களை வென்று வாழும் இத்தமிழ் பொக்கிசங்களை உலகுக்கு அளித்து மாபெரும் தமிழ் தொண்டு புரிந்தவர் ஒளவை ஆவார்.

           எல்லோர்க்கும் எல்லாத் திற‌மைகளும் வாய்த்து விடுவதில்லை, அப்படியே வாய்த்திருந்தாலும் அதை வெற்றிகரமாக உபயோகித்து தானும் பிறரும் பயனடையும் வண்ணம் எல்லோரும் வாழ்ந்து விடுவதில்லை, ஆனால் பிறப்பிலேயே தமிழறிவுடன் பிறந்த ஒளவையானவர், இயல்பிலேயே வரகவித்துவம் வாய்க்கப் பெற்றவர். இவர் தமது திறமையை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தி அருமையான கவிப்பாக்களைப் புனைந்து, பிற‌ரை ம‌கிழ்வித்து தானும் அதன் மூலம் ப‌ரிசில் பெற்று, இன்றுவரை நிலைத்திருக்கும் வண்ணம், நாமும் ப‌டித்துண‌ர‌வும் வகையில் ப‌ல சிற‌ப்பான நூல்களையும் உருவாக்கித்தந்து அருமையான‌ த‌மிழுக்கு மேலும் அணிக‌ல‌னாய் விள‌ங்கச் செய்து தமிழ்த் தொன்டாற்றியுள்ளார் ஒள‌‌வை பிராட்டியார்.

             ஒளவையால் மொத்தம் 59 செய்யுள்கள் பாடப்பட்டுள்ளன, அவை குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் காணப்படுகின்றன. இதில் முதலாம் ஒள‌வை என நம்பப்படும் ஒளவையால் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி நாற்பது ஆகிய‌ நூல்களை சிறுவர்களுக்கு இயற்றப்பட்டுள்ளன. இள‌ம் பிராயத்திலிருந்தே சிறுவர்கள் மனதில் நற்குணங்கள் பதிவதோடு அவர்கள் தமிழறிவில் சிறந்து விள‌ங்கவும் தமது படைப்புக்களைப் பாலமாக படைத்துச் சென்றவர் ஒள‌வை என்பது உண்மை. இந்த‌ விதையிலிருந்தே தமிழை விருட்சமாக்கும் ஒளவையின் முயற்சி ஒரு மிகவும் உயர்ந்த தமிழத்தொண்டாகும்.

            இவர் தூய தமிழ் வழிபாட்டிற்கு உறுதுணையாக பக்தியையும் தமிழ்ப்படுத்தியவர் ஆவார், அதனை நாம் அசதிக்கோவை, பந்தனந்தாதி, விநாயகர் அகவல் என‌ இவ‌ர் வ‌டித்த‌ நூல்க‌ளின் வ‌ழி உண‌ர‌ முடிகிற‌து. த‌மிழை விடுத்து வேற்று மொழியில் வ‌ழிபாடுக‌ள் அமைவ‌தை ஆத‌ரிக்காது த‌மிழால் ப‌க்தி வ‌ள‌ர்த்து இறைவ‌ழிபாட்டிலும் த‌மிழ்த்தொன்டு ஆற்றியுள்ளார் ஒள‌‌வை...! அற‌ம், பொருள், இன்ப‌ம், வீடு எனும் சித்தாந்த‌ங்க‌ளை த‌ம‌து கவித்திற‌னால் எளிமைப‌டுத்தி வேதாந்த‌க் க‌ருத்துக்களை நயமான கவிகளாக்கி, பல்லோரும் படித்து பயனுறும் நூல்களா‌க்கி தாம் வாழும் கால‌க்க‌ட்ட‌த்தில் த‌மிழ் இல‌க்கிய‌த்தை உயர்ந்த இட‌த்திற்கு எட்ட‌ச்செய்து மகத்தான தமிழ்த்தொண்டு புரிந்தவர் அவ்வை பிராட்டி என்ப‌து த‌மிழ்கூறு ந‌ல்லுல‌க‌ம் க‌ண்ட‌ உண்மையாகும்.‌

             இத்தகு மேன்மையான தமிழ்த்தொன்டுகள் பல புரிந்த ஒளவைக்கு 21ம் நூற்றாண்டில் வாழும் இன்றைய தமிழர்களான நாம் என்ன செய்யப் போகிறோம் ? காலங்களை வென்று இன்றளவிலும் நிலைத்து நிற்கும் இவ‌ர் நூல்க‌ளை ப‌டிப்ப‌தும், ப‌டித்து அத‌ற்கொப்ப ஒழுக்கமும் நற்பண்புகளும் நிறந்த நல்வாழ்வு வாழ்வதும், ஒளவையின் கருத்துக்களை இனி வரும் சந்ததியற்கு எடுத்தியம்புவதுமே அவ்வைக்கும், இவ்வுலகிற்கும், செம்மொழியாம் நம் தமிழ்மொழிக்கும் நாம் புரியவேண்டிய அரும் பெரும் தொண்டாகும்.

வாழ்க தமிழ், வளர்க தமிழ் மக்கள் !


0 கருத்துகள்: