ஔவையாரின் வரலாறு

          ஒளவையின் வாழ்க்கை வரலாற்றினை நோக்குங்கால், அவர் 12ம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர் என்று அறியப்படுகிறது. இவர் தந்தையார் பகவன் எனவும் தாய் ஆதி எனவும், அவர்களுக்கு ஏழாவது குழந்தையாக ஒளவை பாணரகத்தில் அவதரித்ததாகவும் ஒரு குறிப்பு கானப்படுகிறது.

         ஆயினும் இவரின் படைப்புகளின் காலக்கட்டங்களை இன்ன பிற புலவர்களின் காலக்கட்டங்களோடு ஒப்பிட்டு நோக்குங்கால், ஒள‌வை பிராட்டியார் காலத்தை வென்று வாழ்ந்தவர் என்று கணிக்க முடிகிறது. இக்கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக அரசன் அதியமான் நெடுமான் அஞ்சி ஒள‌வைக்கு ஈந்த மரணத்தை வெல்லும் வல்லமை படைத்த அற்புத நெல்லிக்கனி கதையும் கூறப்படுகின்றது. இக்கதையினை நாம் பிரிதொரு பதிவில் காண்போம்.

           இத்தமிழ் மூதாட்டியின் பெயர் சிறப்பினை நோக்குங்கால், அகர வரிசையில் பதினோராம் எழுத்தாகிய "ஔ" எனும் எழுத்தில துவங்கும் ஒளவை என்ற பெயர் அவ்வா என்ற சொல்லின் திரிபாக கருதப்படுகிறது. அதன் பொருள் மூதாட்டி அல்லது தவப்பெண் என்பதாகும் என்று பழந்தமிழ் அகராதி பகர்கிறது. அத்துடன் பிந்தையகாலத்தில் ஒளவை எனும் சொல், வயது அல்லது அறிவாற்றல் ஆகியவற்றில் முதிர்ச்சி பெற்றவர்க்கு வழங்கப்படும் குறியீடாகவும் அமைந்துள்ளது. இதிலிருந்தே பெரும் சிறப்பு வாய்ந்த தமிழ்ப்புலவி இவர் என்பது வெள்ளிடைமலை.

            சிரஞ்சீவியாக வாழ்ந்தவர் ஒளவை என்று எண்ணப்பட்டாலும், வரலாற்று ஆசிரியர்களின் கூற்றின்படி மூன்று பெண்புலவர்கள் 12ம் நூற்றாண்டுக்கு முன் ஒள‌வை எனும் பெயருடனும் ஒருமித்த குணாதிசயங்களோடும், புலமையோடும் வெவ்வேறு காலக்கட்டங்களில் தமிழகத்தில் வாழ்ந்தனர், கவி பாடிச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றனர்.

            மேற்குறிப்பிட்ட வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி முதலாம் ஒள‌வை கடைச்சங்க காலத்தில் வள்ளுவர், நக்கீரர் போன்றோரின் காலக்கட்டத்தில் வாழந்ததாகவும், இரண்டாம் ஒள‌வை பக்தி இலக்கியப் புலவர்களாகிய சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் காலத்திலும் மூன்றாமவர் கம்பர், புகழேந்தி, செயங்கொண்டார், சேக்கிழார், ஒட்டக்கூத்தர் போன்றோர் வாழ்ந்த காலத்திலும் வாழ்ந்தார் என்றும் சான்று பகர்கின்றனர்.இவையன்றி 14ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டுக்கு மத்தியிலான காலக்கட்டத்தில் மேலும் இரண்டு ஔவைகள் வாழ்ந்தனர் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். ஓர் ஒளவை 14ஆம் அல்லது 15ஆம் நூற்றாண்டிலும் அடுத்தவர் 18ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த இரு ஒளவைகளின் வாழ்க்கைக் குறிப்புக்கள் முழுமையாகக் பெறப்படவில்லை.

           ஔவையின் தோற்றப்பொலிவுப் பற்றி விவரிக்கையில் அறியப்படும் தகவல்கள் யாதெனில் ஔவை என்பவர் ஒரு விறலி (அதாவது ஒரு பாடலின் பொருளை உணரும் வகையில் மெய்ப்பாடு தோன்ற ஆடிக்காட்டுபவள் விறலி என்று அழைக்கப்படுபவராவார்). இவர் மடப்பத்தன்மை பொருந்திய மடவரல். இவர் மைதீட்டிய கண்களும் வாட்டமான நெற்றியும் அமைந்தவராக அறியப்படுகிறார். மேலும் எடுப்பான இலுப்பில் அழகிய அணிகலன்களையும் அணிந்திருந்தார் என அறியப்படுகிறார்.

            மனித வாழ்வுக்கேற்ற மகத்தான தத்துவங்களை வாரி வழங்கிய அவ்வையின் பொதுச் சிறப்பியல்புகள் என சில விசயங்கள் கூறப்படுவதுண்டு. அவையாவன ஒளவையானவர் பிறவியிலேயே தமிழறிவுடன் பிறந்தவர், பெற்றோரிடத்தில் வளராதவர், பாணரகத்தில் வளர்ந்தவர்,சிவபரத்துவம் தெளிந்தவர், வரகவித்துவம் வாய்க்கப்பெற்றவர்.இலௌகிகம்,வைதிகம் இரண்டும் தெரிந்தவர். உள்ளம்,உண்மை,மொழி ஆகியவற்றில் உயர்ந்தவர். அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கும் புரிந்தவர். தமிழ் நாடு முழுதும் திரிந்தவர்.கோவலூரிலும் புல்வேளுரிலும் வெகுநாட்கள் வாழ்ந்தவர். பலரை பற்றி கவிபாடிப் பரிசு பெற்றவர். சிறியோராயினும், வறியோராயினும் தமக்கு பரிசு ஈந்தவரை பெரியோராய் மதித்துப் பாடியவர். பரிசு கொடுத்தாலும் பாட்டுக் கேட்டலிலும் பாராமுகம் காட்டியவரையும், பாடலருமை அறியா மூடரையும் வெறுத்துப் பாடிய‌வர். மேற்கூறிய சிறப்பியல்புகள் அனைத்து ஔவைகளிலும் ஒருமித்து இருந்ததாகக் கூறப்படுகிறது.


 

12 கருத்துகள்:

கவிஞா் கி. பாரதிதாசன் சொன்னது…

வணக்கம்

ஓளவையிள் நுால்களை அள்ளிப் படைத்துள்ள
பாவையே வாழ்கபல் லாண்டு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

சி.ப.ரஞ்சிதமலர் சொன்னது…

நன்றி ஐயா !

RAMAR T சொன்னது…

innum niraya vilakkam thevai

Sankar Arumugam சொன்னது…

அருமையான முயற்சி !
நன்றி !

சி.ப.ரஞ்சிதமலர் சொன்னது…

நன்றி ஐயா !

கணேசன் P சொன்னது…

உங்கள் பதிவுற்க்கு என் நன்றி....

prabhupl ppalani சொன்னது…

ஔவை பிறந்த ஊர் என்ன?

Unknown சொன்னது…

Super

Admin சொன்னது…

வெவ்வேறான கலங்களில் வெவ்வேறு பெண்புலவர்களாக 5 பெண் புலவர்கள் வாழ்ந்தரக்கிறார்கள

கோவி.தமிழ்ச்செல்வி சொன்னது…

பல புதிய தகவல் அறிந்தேன்; மாறுபட்ட ஓர் ஔவையைக் கண் முன் காண்கிறேன்;வியக்கிறேன்.சி.ப.ரஞ்சிதமலர் சொன்னது…

மகிழ்ச்சி சகோதரி !

பெயரில்லா சொன்னது…

ஔவையார் 6 பேர்

ஔவையார், சங்ககாலப் புலவர்
ஔவையார், அங்கவை சங்கவைக்கு மணம் முடித்து வைத்தவர்
ஔவையார், அறநூல் புலவர்
ஔவையார், நூல் புலவர்
ஔவையார், கதையில் வரும் புலவர்
ஔவையார், சிற்றிலக்கியப் புலவர்

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D