ஒளவையும் உயிர்மீண்ட பலாவும்...!
அது ஓர் அழகிய ஆரணியம், இலைகளும், கிளைகளுமாய் பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்தமனோரம்மியமான காடு. தூரத்தில் சலசலக்கும் நீரோடையின் சப்தம், அவ்வப்போது அதில் நீரருந்த வந்து போகும் விலங்குகள் ஓசைகள் என இயற்கையின் இனிய ஓசைகள். பலதரப்பட்ட பறவைகள் ஆரவார மகிழ்ச்சியோடு வட்டமடித்துக்கொன்டிருந்தன. அந்த வனத்தில்.அந்த அழகிய காட்டின் ஓரத்தில் ஒரு குறவன், அவன் பெயர் கனகன், நல்ல வாட்ட சாட்டமான தோற்றமும், வீரனுமாக விளங்கிய அவனுக்கு இரு மனைவியர் வாய்த்திருந்தனர், மூத்தாள் பெயர் முத்தரசி, அழகிய முகமும், நன்னடத்தயும், ஒழுக்க குணங்களும் வாய்க்கப்பெற்ற பெண்ணரசி. மிகவும் நல்லவளான தனது முதல் மனைவி முத்தரசி மீது கொள்ளைப்பிரியம்.கனகனுக்கு, எனினும் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் மட்டும் வாய்க்கவே இல்லை...!கனகனும், முத்தரசியும் மனம் வெதும்பினர், முத்தரசியின் வற்புறுத்தலால் கனகன் இன்னொரு பெண்ணை மணம் புரிந்து கொன்டான்.
இரண்டாம் தாரமாக வாய்த்த இளையாள் பெயர் இடும்பி. அழகிலும் குணத்திலும் முத்தரசிக்கு ஏணி வைத்தாலும் எட்டாதவள் இடும்பி. மேலும் அவள் கெட்ட எண்ணங்களும் கேடுகெட்ட புத்தியும் நிறைந்தவளாய் வளைய வந்தாள்.முதல் தாரத்தின் மீது அளவற்ற அன்பு இருந்தாலும் தனக்கு ஒரு வாரிசு கிடைக்கும் எனும் நம்பிக்கையில் இடும்பியை மணந்து கொன்டான் கனகன். ஆனால் கனகனின் எண்ணம் ஈடேறணவில்லை. இடும்பியின் மூலமும் அவனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.குழந்தை இல்லையெனும் பெரும் குறையிருந்தாலும் தனது கவலையை வெளிக்காட்டாது கணவனிடம் மிகவும் அன்பும், மரியாதையும் கொன்டு மிகவும் மகிழ்ச்சியாக தனை வெளிக்காட்டிக்கொன்டு வாழ்ந்து வந்தாள் முத்தரசி, இது அவளின் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது, கனகனது அன்பும் அவள்பால் அதிகரிக்கச் செய்தது.
இது எந்நேரமும் சோம்பலும் சிடுசிடுப்புமாய் திரியும் இடும்பிக்குப் பிடிக்கவில்லை, அவள் மனம் முழுக்க முத்தரசியின் மீது பொறாமைத்தீ பற்றி எரிந்தது. முத்தரசியை எப்படியாவது அழவைத்துப்பார்க்கவேண்டும் என மனதிற்குள் கங்கணம் கட்டிக்கொன்டு, தக்க சமயத்திற்கு காத்திருந்தாள் இடும்பி. தனது வாழ்வின் வெறுமையை திசை திருப்ப முத்தரசி ஒரு பலாமரத்தை நட்டு வைத்தாள். உரமும் நீருமிட்டு, அதை தனது குழந்தையாகவே பாவித்து பேணிக்காத்து வளர்த்து வந்தாள். அந்த பலா மரம் துளிர்விட், தளிர்விட்டு, கிளைவிட்டு, இலைவிட் ஓர் அழகிய மரமாய் வளர்ந்து மிளிர்ந்தது. பச்சைபசேலெனும் இலைகளும், அழகிய பூக்களும், அளவற்ற கனிகளும் நிரம்பி வழிந்தது அழகிய அந்த பலா மரம். அதிலே தேனின் சுவையொத்த பழங்கள நிரம்பியுள்ளது கண்டு, அணில்களும், பறவைகளும் அதில் குடியேறி மகிழ்ச்சி கண்டன. முத்தரசியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை, அந்த பலாமரத்தை மேலும் அதிகமாக நேசித்து, பாதுகாத்து பராமரித்து வந்தாள், அதிலே அவள் எல்லையற்ற மன அமைதியும் நிறைவும் கொன்டு மகிழ்ந்திருந்தாள்.
நாட்கள் நகர்ந்தன, ஏதோ வேலையாய் முத்தரசி வீட்டைவிட்டு வெளியில் சென்றாள். இதற்காகவே காத்திருந்த இடும்பி, முத்தரசியின் மகிழ்ச்சிக்கு ஆதாரமாய் விளங்கும் அவள் அருமை பலாமரத்தினருகில் சென்றாள். அவள் கையில் ஒரு பெரிய வெட்டறிவாள்! தீராத கோபத்துடன் வெறபிடித்தவளாய் அந்த பலாமரத்தில் அறிவாளைப் பாய்ச்சினாள். வேகவேகமாக அந்த மரத்தை வெட்டி வீழ்த்த துவங்கினாள். அதுகாறும் அந்த மரத்தில் குடியிருந்த பறவைகள் சோகத்துடன் கீச்சிட்டவாறு கானகத்தினுள் ஓடி மறைந்தன, பெரும் இரைச்சலுடன் முத்தரசியின் அன்பிற்குப் பாத்திரமான அந்த அழகிய பலா மரம் வெட்டப்பட்டு வீழ்ந்தது. சூனியப் புன்னகையுடன் தனது வீட்டிற்குள் ஓடிப் புகுந்து, வெட்டறிவாளை மறைத்துவிட்டு ஏதுமறியாதவள் போல் படுத்து உறங்குவதாய் பாசாங்கு செய்தாள் இடும்பி. வீடு திரும்பிய முத்தரசி வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கும் பலா மரத்தைக்கண்டு அதிர்ந்து போனாள். வேதனை தாளாது அழுது புலம்பினாள், கண்ணீரும் கம்பலையுமான அவள் நிலைகண்டு, அவளைத் தேற்றும் வழியின்றி கனகனும் திண்றினான். ஊனுரக்கம் மறந்து ஆழ்ந்த கவலையில் வீழந்தாள் முத்தரசி.
அவள் நொந்து வாடுவது கண்டு உள்ளூர அகமகிழந்தாள் பொல்லாத இடும்பி.
இந்த சமயத்தில் தான் ஒளவை பிராட்டியார் அவ்வழி வந்தார், வெயிலில் நடந்து சோர்ந்த அவர் தாகசாந்தி செய்து கொள்ள அருகாமையிலிருந்த கனகன் வீட்டிற்கு வந்தார். விருந்தோம்பலில் சிறந்த கனகனும் முத்தரசியும் கவலையிலும் ஒளவையை பரிவோடு உபசரித்தனர். எனினும் வாட்டமுற்ற அவர்களின் தோற்றம் கண்டு அவர்களின் உண்மை நிலையை கேட்டறிந்த ஒளவை தமது கவித்துவத்தால் அந்த பலாவிற்கு உயிரூட்டினார். அவரது கவியின் சக்தியால் அழிக்கப்பட்ட பலா மீண்டும் இலைவிட்டு, கிளைவிட்டு ஓங்கி உயர்ந்து வளர்ந்தது. அடர்ந்த மரமாகி பூவும் பிஞ்சும் நிறைந்து, பழம் காய்த்துப் பழுத்து நின்றது.வீழந்த மரத்தை வளரச் செய்ய ஒளவை கூரியவாளால் குறைபட்ட கூன்பலா ஓரிலையாய்க் கொம்பாய் உயர்மரமாய்ச் – சீரிய வண்டுபோல் கொட்டை வளர்காயாய்ப் பின்பழமாய்ப் பண்டு போல் நிற்கப் பணி.வெட்டுண்டு வீழ்ந்த தனது பலா மரம் முன்னைப்போல் வளர்ந்து ஆளானது கண்டு அகமகிழ்ந்து போனாள் முத்தரசி, உடனே தனது நன்றியை புலப்படுத்த ஒரு படி தினைமாவை ஒளவைக்கு பரிசளித்தாள். அதனைத் தனது தொங்குமூட்டையில் வைத்துக்கொன்டு ஒளவை பிராட்டியார் சோழனின் அவையை சென்றடைந்தார். ஒளவையின் பையைக்கண்டு அதனுள் என்ன உண்டு என சோழன் வினவ, ஒளவை சோழனுக்குகூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறமகளும் மூழைக்குழக்கு தினைதந்தாள் – சோழாகேள் உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை ஒப்பிக்கும் என்றனுளம்.என்று பதிலளித்தார்.
2 கருத்துகள்:
இதுவரை நான் அறியா அறிய செய்தி இது..................நன்றி......தொகுப்பாளருக்கு வாழ்த்துக்களுடன் ஆலயம்.எஸ்.ராஜா
நன்றி எஸ்.ராஜா !
கருத்துரையிடுக