பக்கங்கள்

ஆற்றிய பணிகள்

           ஒளவை பிராட்டியார் உலக மாந்தர் உய்வடைய தமது கவிப்பாக்களின் வழி நிறைய நற்பணிகளை ஆற்றிச் சென்றுள்ளார்.மிகப்பெரிய வாழ்வியல் தத்துவங்களை மிகவும் எளிய முறையில், ஒருவரிக் கவிதைகளாக புனைந்து மனதில் ஆழமாகப் பதியும் வண்ணம் அற்புதமாகப் படைத்தளித்தவர் ஒளவை பிராட்டி என்றால் அது மிகையல்ல...! இவர் இலெளகிகம், வைதிகம் இரண்டும் ஐயம் திரிபுர புரிந்து, அவற்றை மேன்மை வாய்ந்த தனது கவிப்புலமையால் யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் இனிய நடையில், எளிய முறையில் மக்களுக்கு கவிதைகளாக்கித் தந்துள்ளார்.

           சிவபரத்து வந்தெளிந்தவரான இவ்வம்மையார், பக்தி நாட்டம் கொன்டு இறை பக்தியை முன்னிறுத்தி பல தெய்வ வழிபாட்டுக் கவிதைகளையும் படைத்துள்ளார். இவரின் "விநாயகர் அகவல்" இன்றும் தியான வழிபாட்டிலும் , குரு வழிபாட்டிலும் முன்னிலையாக போற்றிப்பாடப்படுவது யாவரும் அறிந்ததே. இவரது இறைத்தொன்டு இதிலிருந்து நமக்கு புலனாகிறது.
 
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பது பழமொழி, நல்ல மனிதர்கள் இம்மண்ணில் உருவாக்கப்படவேண்டும் என்பதே ஒளவை பிராட்டியாரின் பெரும் கனவாக இருந்திருக்கிறது, அதனாலேயே அவர் சிறுவர் சிறுமியர்க்கும் அறிவுரைகளை பாடல் வரிகளாக விட்டுச் சென்றுள்ளார். இன்றும் தமிழ் பயிலும் மாணவர்களின் அரிச்சுவடியாக விளங்குவது ஒளவை பாடிச்சென்ற பாடல்களே...! அவை "இளமையிற் கல்வி சிலை மேல் எழுத்து சிலைமேல் எழுத்து" என்பதற்கொப்ப இளம்பிராயத்திலிருந்தே சிறுபிள்ளைகள் நல்லறிவும் ஒழுக்கமும் நற்பண்புகளும் வாய்க்கப்பெற்ற மனிதராக மலர உதவி புரிகின்றது. ஒளவையின் அரும்பணிகளின் தலையாய பணியாக இதை புரிந்து கொள்ள முடிகிறது.

            உலகம் சிறக்க, நாடு செழிக்க தனி மனித முன்னேற்றம் இன்றியமையாததாகும்..! ஒரு உயர்ந்த குணம் படைத்த மனிதனால் ஒரு சிறந்த குடும்பத்தை உருவாக்க இயலும், பல சிறந்த குடும்பங்கள் ஒருங்கிணைந்தால் சிறந்த ஊர், நாடு என உலகமே சிறப்படையும், இக்கருத்தினை முன்வைத்து ஒள‌வையானவர் பல கவிதைகளை படைத்துள்ளார். அறம் செய விரும்பு, ஆறுவது சினம் என‌த்துவங்கி ஓரம் சொல்லேல் என முடித்த 109 ஆத்தி சூடி வரிகளாகட்டும் சரி அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனத்துவங்கி முடித்த  ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம் 91 வரிகள் படைத்த கொன்றை வேந்தனாகட்டும், தனிமனித ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, வீரம், அறிவு, திறமை ஆகியவை மாந்தரிடையே மலர உன்னதமான கவிப்பணி ஆற்றியுள்ளார் ஓளவை பிராட்டியார் என்பதற்கு அவர் பாடிச்சென்ற இக்கவிதை வரிகளே நற்சான்றாகும்.

             மக்கள் நல்ல முறையில் மகிழ்ந்து வாழ நல்ல அரசாட்சி மிக முக்கியமாகும். ஒளவை சாதாரண குடிமக்கள், குழந்தைகள் அன்றி அரசர்க்கும் சிறந்த வழிகாட்டியாகவும், அவர் புகழ் பரப்பும் கவிப்புலவியாகவும் திகழ்ந்து அரும் தொன்டாற்றியுள்ளார், பல காலங்களுக்கு முன்னர் வாழ்ந்த மன்னர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்தம் வீரம், கொடைத்தன்மை மாண்பு மரபு ஆகியவைகளை ஒளவை போன்ற அரும் புலவர்களின் கவிப்பாக்களில் இருந்தே கண்டுணர்ந்து மக்களுக்கு தெளிவுபடுத்துகின்றார்கள் சரித்திர ஆசிரியர்கள். அவ்வகையில் காலத்தை வென்ற கல்வெட்டுக்களாய் இவர் பாடல்கள் நமது மூதாதையர்களின் அருமை பெருமைகளை நமக்கு விளக்கும் கலங்கரை விளக்கமாய் திகழ்கின்றது என்பது கண்கூடு...!  ஆக த‌னது வாழ்வில் உலக மக்கள், தமிழ்மொழி, பக்தி நெறி என வாழ்வு சார்ந்த யாவற்றுக்கும் ஈடினையற்ற அரும் பெரும் தொன்டாற்றியுள்ளார் ஒளவை என்பது வெள்ளிடைமலை...!

1 கருத்து: