ஒளவையின் பார்வையில் நட்பு...!

ஒளவையின் பார்வையில் நட்பு...!

 அது ஓர் அழகிய குளம்,அதில் நீரருந்த நிறைய பறவைகள் அங்கே நிறைந்திருக்கின்றன. அக்குளத்தில் அழகிய தாமரைச்செடிகளும், அல்லிச்செடிகளும் மலர்கள் பூத்து நிறைந்திருக்கின்றன.மழைக்காலம் தீர்ந்து, கோடை வெயிலில் அக்குளம் வற்றிப்போகிறது, அதுவரை அக்குளத்தை நாடி நலம்பெற்ற பறவைகள் இதற்கு மேலும் அக்குளத்தால் தமக்கு நன்மைகள் ஏதுமில்லை என்பதை உணர்ந்து கொஞ்சமும் நன்றியின்றி அங்கிருந்து பிரிந்து சென்றுவிடுகின்றன. ஆனால் தாமரையும், அல்லியும் அக்குளத்திலேயே தமது இறுதிக்காலம் வரை பிரியாது உடனிருக்கின்றன‌. இந்த அழகான உவமையைக் கூறி உண்மை நட்புக்கும் சுயந‌லம் மிகுந்த போலி நட்புக்குமான வித்தியாசத்தை அழகுற விள‌க்குகிறார் ஒளவை. உண்மையான நண்பர்கள் எந்த சமயத்திலும் நம்மை விட்டுப் பிரிந்து செல்ல மாட்டார்கள், சொந்த தேவைகளுக்காக சுயநலமாக நம்மை விட்டு பிரிந்து செல்பவர்கள் உண்மை நண்பர்களாகவும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளாமல் இருப்பதே நன்று.‌ 

நட்பு, மிகவும் உயர்ந்த விடயம். மூன்று எழுத்து காவியம் அது, உண்மை நட்பு ஒரு கோடி உறவுகளுக்கு சமம். சந்தோசங்களையும், துக்கங்களையும் பகிர்ந்து கொள்ள, ரகசியங்களையும், முக்கியமானவற்றையும் அளவளாவிக் கொள்ள, சோகத்தில் தோள் சாய்த்து அழ, இடர் காலத்தில் கைபிடித்து எழ இரு வழிப்பாலமாவது நல்ல நட்பு ஒன்றே. இவ்வுலகில் தாய் தந்தையரை, சகோதர, சகோதரிகளை, ஏன் தமக்கு கிடைக்கப்போகும் குழந்தைகளையும் கூட தேர்ந்தெடுக்கும் உரிமையை யாருக்கும் இறைவன் தருவதில்லை, வாழக்கைத்துணையாகப் போகும் அந்த ஒருவரையும், உயிர்த்துணையாக விளங்கப்போகும் நண்பர்களையும் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் மட்டுமே அவன் மாந்தர்க்கு விட்டு வைத்தான்.


எனவே உயர்விலும், தாழ்விலும், இன்பத்திலும், துன்பத்திலும் உடன் வருவதே உண்மை நட்பு, அது வாழ்க்கைக்கு வாய்த்த வரப்பிரசாதம். உண்மை நட்பு ஒரு வரம், அதைப் பேணி காப்பது ஒரு தவம்...! ஒளவையின் கூற்றுப்படி உண்மையான நண்பர்களாக நாம் விளங்கிட‌ வேண்டும், பின்னர் நல்ல நண்பர்களோடு நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். அந்த நட்பை உயிர் உள்ளளவும் போற்றிப் பாதுகாத்து வாழ்ந்திருக்க வேண்டும். நல்ல நட்பால் உலகம் மகிழ்ந்திருக்கட்டும். நட்பின் வித்தியாசத்தை நயமுடன் விளக்கும் ஒளவையின் மூதுரை வரிகள்‍...

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

SUPPER

ஆலயம்.எஸ்.ராஜா சொன்னது…

நட்பின் இலக்கணத்தை அவ்வை வழியில் கண்டு மகிழ்ந்தேன்.................ஆனால் அது தன்னலமற்ற பொற்காலம்.............ஹூம்........இதைத்தான் இப்போது சொல்ல முடியும்

Unknown சொன்னது…

அருமை 👏

Gopi R சொன்னது…

”வாழக்கைத்துணையாகப் போகும் அந்த ஒருவரையும், உயிர்த்துணையாக விளங்கப்போகும் நண்பர்களையும் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் மட்டுமே அவன் மாந்தர்க்கு விட்டு வைத்தான்” இந்த கருத்து முற்றிலும் தவரானது... இங்கே எதுவும் நாமாக தேர்ந்து எடுக்க முடியாது, அனைத்தும் நம் விதியின் வசமே. நன்றி

.


.

fallen leaves  ... Pictures, Images and Photos